search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓ பன்னீர் செல்வம்"

    • தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர் இல்லம், ராமாவரம் எம்.ஜி.ஆர். தோட்டம் ஆகிய இடங்களுக்கு சென்று ஓ.பன்னீர் செல்வம், எம்.ஜி.ஆர். சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
    • தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் முன்னாள் மேயர் சைதை துரைசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது.

    தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் எம்.ஜி.ஆர். பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார்.

    எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாளை குறிப்பிடும் வகையில் 106 கிலோ பிரமாண்ட கேக்கும் வெட்டப்பட்டது. அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், கோகுலஇந்திரா, வளர்மதி, பொன்னையன் மாவட்ட செயலாளர்கள் விருகை ரவி, பாலகங்கா, ஆதிராஜாராம், வெங்கடேஷ்பாபு, ஆர்.எஸ்.ராஜேஷ், தி.நகர் சத்யா, அசோக், கே.பி.கந்தன், மாநில இலக்கிய அணி துணை செயலாளர் இ.சி.சேகர், வக்கீல் சதாசிவம், பெரும்பாக்கம் ராஜசேகர், டாக்டர் சுனில், முகப்பேர் இளஞ்செழியன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் வி.எஸ்.பாபு, ஈஸ்வரன், சைதை கடும்பாடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    டெல்லி அ.தி.மு.க. அலுவலகத்தில் பணிபுரிந்து மரணம் அடைந்த சந்திரசேகரன், குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் மற்றும் அ.தி.மு.க. கொடியை கட்டும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த தொண்டர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதி உதவிகளையும் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

    சென்னை அண்ணா சாலையில் ஸ்பென்சர் எதிரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், வெல்ல மண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஜே.சி.டி.பிரபாகரன், எம்.ஜி.ஆர். மன்ற மாநில இணை செயலாளர் மங்காராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதன் பின்னர் தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர் இல்லம், ராமாவரம் எம்.ஜி.ஆர். தோட்டம் ஆகிய இடங்களுக்கும் சென்று ஓ.பன்னீர் செல்வம், எம்.ஜி.ஆர். சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

    தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் முன்னாள் மேயர் சைதை துரைசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    • 2-வதாக வந்த கடிதத்தையும் தலைமைக் கழகத்தில் வாங்காமல் தேர்தல் கமிஷனுக்கு திருப்பி அனுப்பி விட்டனர்.
    • தபால் திரும்பி வந்ததற்கான அத்தாட்சி நேற்று தேர்தல் கமிஷனுக்கு வந்து விட்டது.

    சென்னை:

    அ.தி.மு.க. இரு அணிகளாக பிளவுபட்டுள்ள நிலையில் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமியும், ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் ஓ.பன்னீர்செல்வமும் அ.தி.மு.க.வை வழி நடத்தி செயல்பட்டு வருகின்றனர்.

    தற்போது வரை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகம் எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. அ.தி.மு.க.வுக்கு வருகிற கடிதங்கள் அனைத்தும் தலைமைக் கழகத்துக்கு தான் அனுப்பப்படுகிறது.

    அந்த வகையில் தேர்தல் கமிஷனில் இருந்து அதிகாரப்பூர்வமாக வழங்கப்படும் கடிதங்களும் அ.தி.மு.க.வின் தலைமை கழகத்துக்குதான் அனுப்பி வைக்கப்படுகிறது.

    இந்த சூழலில் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அண்மையில் இந்திய சட்ட ஆணையம் அனுப்பிய கடிதம் கூட அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று பெயரிட்டு ராயப்பேட்டையில் உள்ள அதி.மு.க. தலைமைக் கழகத்துக்கு வந்திருந்தது.

    இதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன், சட்ட ஆணையத்துக்கு தங்களது ஆட்சேபனைகளையும் தெரிவித்திருந்தனர்.

    இப்படி எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் இடையே பனிப்போர் நிலவி வருகிறது.

    இந்த சூழ்நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்று வரும்போது ஒருவர் எங்கிருந்தாலும் வாக்களிக்கும் வகையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வசதிக்காக ஆர்.வி.எம். என்ற புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை (ரிமோட் எலெக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்) தலைமை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்ய உள்ளது.

    இது தொடர்பாக வருகிற 16-ந்தேதி ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் அந்தந்த மாநிலத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளிடம் கருத்து கேட்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

    அது மட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு யார் பெயரில் கடிதம் அனுப்ப வேண்டும் என்று அந்த கடிதத்தில் விளக்கி இருந்தது.

    அதன்படி அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கும், தி.மு.க., பா.ம.க.வில் தலைவர்களுக்கும், தே.மு.தி.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் பொதுச் செயலாளர்களுக்கும் பதவிகளை குறிப்பிட்டு அழைப்பு அனுப்ப வேண்டும் என்று கூறி இருந்தது.

    இந்திய தேர்தல் கமிஷனின் இந்த விளக்க கடிதம் கடந்த வியாழக்கிழமை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுக்கு கிடைத்ததும் அதன் அடிப்படையில் அவர் ஒவ்வொரு கட்சிக்கும் தேர்தல் கமிஷனின் தபால் பட்டுவாடாவை ஊழியர் மூலம் (மெசேஞ்சர்) ஒவ்வொரு கட்சிக்கும் கொடுத்து அனுப்பினார். அதில் ஒருங்கிணைப்பாளர்-இணை ஒருங்கிணைப்பாளர் என்று இருந்ததால் அந்த கடிதத்தை அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் பெற்றுக்கொள்ளாமல் வியாழக்கிழமையே திருப்பி அனுப்பி விட்டனர்.

    இதன் பிறகு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மறுபடியும் வெள்ளிக்கிழமை ஸ்பீடு போஸ்ட் மூலம் அ.தி.மு.க. தலைமைக் கழகத்துக்கு அழைப்பு கடிதம் அனுப்பி வைத்தார்.

    2-வதாக வந்த அந்த கடிதத்தையும் தலைமைக் கழகத்தில் வாங்காமல் தேர்தல் கமிஷனுக்கு திருப்பி அனுப்பி விட்டனர். தபால் திரும்பி வந்ததற்கான அத்தாட்சி நேற்று தேர்தல் கமிஷனுக்கு வந்து விட்டது.

    இதனால் 16-ந்தேதி நடைபெறும் கூட்டத்தில் அ.தி.மு.க. பங்கேற்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இதுகுறித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கூறுகையில், "அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் பதவி இல்லை என்றும் இடைக்கால பொதுச்செயலாளர் பதவிதான் உள்ளது என்றும் இந்திய தேர்தல் கமிஷனுக்கு அ.தி.மு.க. சார்பில் ஏற்கனவே 3 கடிதங்கள் கொடுத்து இருக்கிறோம்.

    அ.தி.மு.க. பொதுக்குழு கூடிய விவரங்கள், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், சட்ட திட்டங்கள் எல்லாவற்றையும் அதில் குறிப்பிட்டுள்ளோம்.

    எனவே இடைக்கால பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு மறுபடியும் கடிதம் அனுப்ப வேண்டும் என எதிர்பார்ப்பதாக" தெரிவித்தார்.

    எனவே வருகிற 16-ந்தேதி கூடும் தேர்தல் கமிஷன் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் யார்-யார் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    • கம்பம் தி.மு.க எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணனின் சகோதரர் மனைவி கீதா கடந்த 28-ந்தேதி உடல்நலக்குறைவால் காலமானார்.
    • கம்பம் ராமகிருஷ்ணன் வீட்டிற்கு சென்ற ஓ.பன்னீர்செல்வம் அவரிடமும், அவரது சகோதரர் முருகேசன் குடும்பத்தாரிடமும் துக்கம் விசாரித்து ஆறுதல் கூறினார்.

    கம்பம்:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமைக்கு கடும் போட்டி நிலவி வரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் பெரியகுளத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் ஆதரவாளர்களை சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அவரை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து நிர்வாகிகள் சந்தித்து வருகின்றனர்.

    மேலும் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டத்திலும் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் உற்சாகம் அளித்து வருகிறார். தொண்டர்களின் திருமண நிகழ்ச்சிகள், கோவில் திருவிழாக்கள் போன்றவற்றில் கலந்து கொள்வதுடன் தனது போடி தொகுதிக்குட்பட்ட மக்களையும் சந்தித்து குறைகளை கேட்டு வருகிறார்.

    இந்நிலையில் கம்பத்தில் தி.மு.க எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் இல்லத்திற்கு சென்ற ஓ.பன்னீர்செல்வம், அவரது உறவினர் இறந்ததற்கு துக்கம் விசாரித்தார். கம்பம் தி.மு.க எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணனின் சகோதரர் மனைவி கீதா கடந்த 28-ந்தேதி உடல்நலக்குறைவால் காலமானார்.

    இதனைதொடர்ந்து கம்பம் ராமகிருஷ்ணன் வீட்டிற்கு சென்ற ஓ.பன்னீர்செல்வம் அவரிடமும், அவரது சகோதரர் முருகேசன் குடும்பத்தாரிடமும் துக்கம் விசாரித்து ஆறுதல் கூறினார். அப்போது தி.மு.க, அ.தி.மு.க நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

    இது தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தமிழ்நாட்டில் 16-ந்தேதி அனைத்து கட்சி கூட்டம் நடத்த தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஏற்பாடு செய்துள்ளார்.
    • தேர்தல் கமிஷன் ஓ.பன்னீர்செல்வத்தின் புதிய முகவரிக்கு கடிதம் அனுப்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களிலும் பல்வேறு காலகட்டங்களில் தேர்தல் நடத்துவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதுடன் அரசுக்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் செலவினங்கள் ஏற்பட்டு வருகிறது.

    இதை தவிர்ப்பதற்காக பாராளுமன்ற தேர்தலையும், மாநில சட்டசபை தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவது தொடர்பாக "ஒரே நாடு ஒரே தேர்தல்" என்ற திட்டத்தை இந்திய சட்ட குழு பரிசீலனை செய்து வருகிறது.

    அவ்வாறு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தினால் செலவுகளை மத்திய அரசும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் சரிசமமாக பிரித்துக்கொள்ளலாம் என்பதால் இந்த திட்டம் தொடர்பாக சட்ட ஆணையம் நாட்டில் உள்ள பல்வேறு கட்சித் தலைவர்களிடம் கருத்து கேட்டு வருகிறது.

    அதன் அடிப்படையில் அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமியிடம் இந்திய சட்ட ஆணையம் கருத்து கேட்டு கடந்த வாரம் கடிதம் அனுப்பி இருந்தது.

    இந்த சூழலில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்று வரும் போது ஒருவர் எங்கிருந்தாலும் வாக்களிக்கும் வகையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் வசதிக்காக ஆர்.வி.எம். என்ற புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை (ரிமோட் எலெக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்) தலைமை தேர்தல் ஆணையம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

    இது தொடர்பாக வருகிற 16-ந்தேதி ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் அந்தந்த மாநிலத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளிடம் கருத்து கேட்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

    அதன்படி தமிழ்நாட்டில் 16-ந்தேதி அனைத்து கட்சி கூட்டம் நடத்த தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஏற்பாடு செய்துள்ளார்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்டரங்கில் 16-ந்தேதி நடைபெறும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ஒவ்வொரு தேசிய, மாநில கட்சிகளுக்கும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் அனுப்பி உள்ளார்.

    அதன்படி அ.தி.மு.க.வுக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. இந்த கடிதம் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழக முகவரிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

    ஆனால் இந்த கடிதத்தை அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாங்க வேண்டாம் என்று கூறியதால் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் உள்ள ஊழியர்கள் கடிதத்தை வாங்காமல் தேர்தல் கமிஷனுக்கு திருப்பி அனுப்பி விட்டனர்.

    ஏனென்றால் அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி இப்போது கிடையாது என்பதால் அதை திருப்பி அனுப்பியதாக அவர்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் கேட்டபோது, "இந்திய தேர்தல் ஆணையம் கொடுத்த ஆவணங்களின் அடிப்படையில்தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என முகவரியிட்டு அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டது" என்று விளக்கம் அளித்தார்.

    அ.தி.மு.க. கட்சி அலுவலகத்துக்கு வந்த கடிதம் திருப்பி அனுப்பப்பட்டு விட்டதால் இந்த கடிதம் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் சென்றடையவில்லை. காரணம் அவர் வேறு முகவரியில் வசித்து வருகிறார்.

    இதனால் தேர்தல் கமிஷன் ஓ.பன்னீர்செல்வத்தின் புதிய முகவரிக்கு கடிதம் அனுப்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது எடப்பாடி பழனிசாமியிடமும் கடிதம் இல்லை. ஓ.பன்னீர்செல்வத்திடமும் தேர்தல் கமிஷனின் கடிதம் இல்லை.

    எனவே 16-ந்தேதி நடைபெறும் கூட்டத்தில் எந்த அடிப்படையில் சென்று அ.தி.மு.க.வினர் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் அணியின் கொள்கை பரப்பு செயலாளர் வா.புகழேந்தியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    அ.தி.முக. தலைமைக் கழகம் பொதுவானது. அது எங்களுக்கும் சொந்தமானது. நாங்கள் தகராறு வேண்டாம் என்பதால்தான் உள்ளே போகாமல் இருக்கிறோம்.

    அ.தி.மு.க. தலைமைக் கழகத்துக்கு தேர்தல் கமிஷன் அனுப்பிய கடிதம் எங்களுடைய முகவரிக்கு தான். ஆனால் அதை அங்குள்ளவர்கள் வாங்காமல் திருப்பி அனுப்பியது பெரிய தவறு.

    தற்போது எங்களிடம் கடிதம் இல்லையென்றாலும், தேவைப்பட்டால் தேர்தல் கமிஷனில் முறையிட்டு அந்த கடிதத்தின் நகலை தலைமைச் செயலகம் சென்று பெற்றுக்கொண்டு கூட்டத்தில் கலந்து கொள்வோம்.

    இவ்வாறு புகழேந்தி கூறினார்.

    ஆனால் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான முன்னாள் எம்.எல்.ஏ. வழக்கறிஞர் இன்பதுரை கருத்து தெரிவிக்கையில், "இந்திய தேர்தல் கமிஷன் அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்கு கடிதம் அனுப்புங்கள் என்று தான் கூறி உள்ளது. தனிப்பட்ட பெயர் போட்டு அனுப்பவில்லை.

    அப்படி இருக்கும் போது இல்லாத பதவி பெயரை குறிப்பிட்டு அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு கடிதம் வந்ததால்தான் திருப்பி அனுப்பி உள்ளனர். எனவே சரியான பதவியை குறிப்பிட்டு தமிழக தேர்தல் அதிகாரி மீண்டும் கடிதம் அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    அதை விட்டுவிட்டு வருவோர், போவோர் கையில் கடிதத்தை கொடுக்க கூடாது. அது சட்டப்படி தவறு.

    இவ்வாறு இன்பதுரை கூறினார்.

    இதனால் தேர்தல் கமிஷனின் கடிதம் விவகாரம் அ.தி.மு.க.வில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • வருகிற 27-ந்தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி கூட்டியுள்ளார்.
    • கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

    சென்னை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி கட்சியை கைப்பற்ற விடமாட்டோம் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட அவர் ஒருங்கிணைப்பாளர் என்கிற பெயருடன் ஆதரவாளர்களை திரட்டி தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தனது அணியின் சார்பில் மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகளையும் நியமித்துள்ள ஓ.பி.எஸ். நேற்று அவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது ஓ.பி.எஸ். உள்பட முன்னணி நிர்வாகிகள் அனைவருமே எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தனர்.

    எடப்பாடி பழனிசாமிக்கு தனிக்கட்சி தொடங்க தைரியம் உள்ளதா? என்று ஓ.பி.எஸ். சவால் விடுத்தார். தாங்கள் தான் உண்மையான அ.தி.மு.க. என்று ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் கூறிவரும் நிலையில், அதற்கு கடும் பின்னடைவு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகாரம் செய்யும் வகையில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் அமைந்திருப்பதே இதற்கு முக்கிய காரணமாக மாறி இருக்கிறது.

    அ.தி.மு.க.வின் 2021-2022ம் ஆண்டுக்கான வரவு-செலவு அறிக்கை கடந்த அக்டோபர் மாதம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்து போட்டிருந்தார். இதனை ஏற்றுக்கொண்டுள்ள தேர்தல் ஆணையம் தங்களது இணையதளத்திலும் வெளியிட்டு உள்ளது. இதனை மிகப்பெரிய அங்கீகாரமாக எடப்பாடி அதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சமூக வலைதளங்களிலும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    இதுதொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வும் வக்கீலுமான ஐ.எஸ்.இன்பதுரை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "இனியெல்லாம் ஜெயமே" என்று குறிப்பிட்டு இடைக்கால பொதுச்செயலாளராக அண்ணன் எடப்பாடியார் கையெழுத்திட்ட 2021-2022ம் ஆண்டுக்கான கட்சியின் தணிக்கை அறிக்கையை ஏற்றுக்கொண்டு இந்திய தேர்தல் ஆணையம் தனது வலைதளத்தில் பதிவிட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

    இதேபோன்று சுப்ரீம் கோர்ட்டிலும் எடப்பாடி பழனிசாமிக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்றே அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

    இந்த வழக்கு விசாரணை ஏற்கனவே 4 முறை நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் வருகிற 4-ந்தேதி வழக்கு விசாரணை நடைபெற உள்ளது. இதுவே இறுதி விசாரணையாக இருக்க வாய்ப்புள்ளதாக எடப்பாடி பழனிசாமி ஆதரவு வக்கீல்கள் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது சுப்ரீம் கோர்ட்டில் நடைபெறும் விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டி இருப்பதாகவும், பொங்கலுக்குள் தீர்ப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்து உள்ளனர்.

    இதில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே தீர்ப்பு கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் அவர்கள் கூறியிருக்கிறார்கள். இதனால் வருகிற 4-ந்தேதி நடைபெற உள்ள வழக்கு விசாரணை பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் வருகிற 27-ந்தேதி ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி கூட்டியுள்ளார். இதில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. எம்.ஜி.ஆர் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், அ.தி.மு.க.வில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எடப்பாடி பழனிசாமி தரப்பில், கட்சி செயல்பாடுகளில் தொய்வு இல்லாமல் இருக்க இந்த வழக்கில் இடைக்கால நிவாரணம் வேண்டும் என கோரினர்.
    • கோரிக்கையை ஏற்று, இடைக்கால நிவாரணம் குறித்து ஒரு இடையீட்டு மனு தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.

    புதுடெல்லி:

    அ.தி.மு.க பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர் வைரமுத்து உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

    அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் ஒரு முடிவு எட்டப்படும் வரை அல்லது உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் வரை அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

    இந்நிலையில் இந்த வழக்கில் பதில் மனு மற்றும் விளக்க மனு தாக்கல் செய்த எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பி.எஸ் தரப்பு பரஸ்பரம் குற்றம்சாட்டியிருந்தனர்.

    இந்நிலையில் இந்த வழக்கு கடந்த 6-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது ஓ.பி.எஸ் ஆதரவாளர் வைரமுத்து தரப்பில் வழக்கை ஒத்திவைக்க கோரப்பட்டது.

    அதேவேளையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில், கட்சி செயல்பாடுகளில் தொய்வு இல்லாமல் இருக்க இந்த வழக்கில் இடைக்கால நிவாரணம் வேண்டும் என கோரினர்.

    அந்த கோரிக்கையை ஏற்று, இடைக்கால நிவாரணம் குறித்து ஒரு இடையீட்டு மனு தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.

    அதன்படி இடைக்கால மனு தாக்கல் செய்துள்ள எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது.

    எனவே அந்த சமயத்தில் கட்சி பணிகளில் இடையூறு விளைவிக்க கூடாது என்றும் இடைப்பட்ட காலத்தில் தேர்தல் வந்தால், அச்சமயத்தில் அ.தி.மு.க கட்சி மற்றும் சின்னம், உள்ளிடவற்றுக்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்தை அணுக ஓ.பி.எஸ்.சுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரி உள்ளார்

    மேலும், பொதுக்குழுவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதால் அதனை காரணம் காட்டி ஏற்கனவே கட்சி விதிகளில் கொண்டு வந்த மாற்றத்தை தேர்தல் ஆணையம் பதிவேற்றம் செய்யாமல் உள்ளனர்.

    இது கட்சி பணிகளில் தொய்வு ஏற்படுத்தியுள்ளது. எனவே இது தொடர்பாகவும் தேர்தல் ஆணையத்துக்கு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் எனவும் இடைக்கால மனுவில் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.

    அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பான ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் வரும் 12-ந் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான நிர்வாகிகளை இழுக்கும் முயற்சியில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
    • பெரியகுளம் பண்ணை வீட்டில் கடந்த 3 நாட்களாக பல்வேறு மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.

    பெரியகுளம்:

    அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சினை தலைதூக்கிய நிலையில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்கினார்.

    இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தனக்கு ஆதரவான நிர்வாகிகளை மாவட்டம் மற்றும் நகரம் ஒன்றிய நிர்வாகிகளாக ஓ.பன்னீர்செல்வம் நியமித்து வருகிறார். புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் மூலம் பொதுக்குழு கூட்டத்தையும் விரைவில் நடத்த உள்ளதாக தெரிவித்தார்.

    இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான நிர்வாகிகளை இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். பெரியகுளம் பண்ணை வீட்டில் கடந்த 3 நாட்களாக பல்வேறு மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். 3ம் நாளான நேற்று சேலம் திருச்சி, விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.

    பொதுக்குழுவை கூட்ட எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் தங்களுக்கு பாதகமாக வரும் பட்சத்தில் அதனை எதிர்கொள்ளும் முறை குறித்து ஆலோசித்தனர். இதனிடையே ஓ.பன்னீர்செல்வம் மீதான வழக்கு ஒன்றில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளதால் நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இதனிடையே ஓ.பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் சந்தித்த புகழேந்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் எங்களுக்கு ஆதரவான தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழகத்தில் உள்ள தொண்டர்கள் அனைவரும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க.வையே எதிர்பார்க்கின்றனர். இருந்தபோதும் ஓ.பன்னீர்செல்வம் அனைவரையும் அரவணைத்து செல்ல முயற்சி மேற்கொண்டு வருகிறார். அதனை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஏற்க மறுக்கின்றனர்.

    எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது புதிதாக கட்டப்பட்ட 11 மருத்துவ கல்லூரியில் மாபெரும் ஊழல் நடைபெற்றதற்கான முகாந்திரம் உள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. எனவே எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். அ.தி.மு.கவை எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் ஓ.பன்னீர்செல்வம் மீட்டெடுத்து மீண்டும் ஆட்சியில் அமர வைப்பார் என்ற நம்பிக்கை தொண்டர்கள் மத்தியில் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சசிகலாவும் அ.தி.மு.க. ஒன்றுபட வேண்டும் என்று தொடர்ந்து பேசி வருகிறார்.
    • தி.மு.க.வை வீழ்த்த எந்த அணியுடனும் கூட்டுசேர தயார் என்று டி.டி.வி.தினகரனும் பேசி வருகிறார்.

    தேசிய கட்சியான பா.ஜனதாவுக்கு இரு திராவிட கட்சிகளில் ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி சேர்ந்தால்தான் பலம் என்பது தொடர்ந்து வரும் அரசியல் வரலாறு. முதல் முதலாக 1998 பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட்டணி அமைத்தது. அந்த தேர்தலில் பா.ஜனதாவுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டது. அதில் 3 இடங்களில் வெற்றியும் பெற்றது.

    அந்த தேர்தலில் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்ததால் மறு ஆண்டே தேர்தல் வந்தது. அந்த தேர்தலில் தி.மு.க-பா.ஜனதா கூட்டணி உருவானது. அப்போது பா.ஜனதாவுக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டு 4 இடங்களில் வெற்றிபெற்றது.

    மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தி 2014 பாராளுமன்ற தேர்தலை பா.ஜனதா சந்தித்தது. அந்த தேர்தலில் இரு திராவிட கட்சிகளின் ஆதரவும் கிடைக்காத நிலையில் பா.ஜனதா சிறிய கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்தித்தது.

    நாடுமுழுவதும் மோடி அலை வீசிய நிலையில் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியவில்லை. தனித்து நின்ற அ.தி.மு.க. அமோக வெற்றிபெற்றது.

    இந்த நிலையில் ஜெயலலிதாவின் திடீர் மறைவால் அ.தி.மு.க.வுக்குள் குழப்பம் ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலை மோடி சமரசப்படுத்தினார். அதன் விளைவாக எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராகவும், ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராகவும் 4 ஆண்டுகளையும் நிறைவு செய்தார்கள்.

    2021 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து நின்ற டி.டி.வி. தினகரனையும் இணைத்துக்கொள்ளும்படி பா.ஜனதா வற்புறுத்தியது. ஆனால் அதை எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஏற்கவில்லை.

    தேர்தலில் தி.மு.க. வென்றது. ஆனால் 50 தொகுதிகளுக்கு மேல் மிக குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. தோல்வி அடைந்தது. அப்போது பா.ஜனதாவின் வேண்டுகோளை அ.தி.மு.க. நிராகரித்ததே தோல்விக்கு காரணம் என்று பா.ஜனதா கூறியது.

    அ.தி.மு.க. கூட்டணியால் சட்டமன்றத்துக்கு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் சென்றனர். இந்த நிலையில் அ.தி.மு.க.வுக்குள் ஏற்பட்ட உட்கட்சி பிளவு அந்த கட்சிக்கு பலவீனத்தை ஏற்படுத்தி இருப்பதாக கருதப்படுகிறது.

    நிர்வாகிகள், தொண்டர்கள் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கே அதிக அளவில் இருக்கிறது. பொதுக்குழுவை கூட்டி எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஒன்றுபட்ட அ.தி.மு.க. இரட்டை தலைமைதான் வேண்டும் என்ற ஓ.பன்னீர்செல்வத்தின் வேண்டுகோளை எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை. ஒற்றைத்தலைமை என்பதில் உறுதியாக இருக்கிறார்.

    சசிகலாவும் அ.தி.மு.க. ஒன்றுபட வேண்டும் என்று தொடர்ந்து பேசி வருகிறார். தி.மு.க.வை வீழ்த்த எந்த அணியுடனும் கூட்டுசேர தயார் என்று டி.டி.வி.தினகரனும் பேசி வருகிறார்.

    2024 பாராளுமன்ற தேர்தலை சந்திக்க பூர்வாங்க பணிகளை பா.ஜனதா தொடங்கிவிட்டது. அனைத்து மாநிலங்களிலும் கூட்டணி மற்றும் தேர்தல் வியூகங்களை பா.ஜனதா மேலிடம் கண்காணித்து வருகிறது. அதில் பா.ஜனதாவுக்கு பிரதிநிதித்துவம் இல்லாத தமிழகத்தில் வரும் தேர்தலில் பலமான கூட்டணி அமைத்து வெற்றிபெற வேண்டும் என்று பா.ஜனதா விரும்புகிறது.

    இதில் கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவை பா.ஜனதா மேலிடம் சரிகட்ட விரும்புகிறது. இதற்காக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை இணைப்பதற்காக பலமுறை முயற்சி எடுத்தும் பலன் அளிக்கவில்லை.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை வந்த பிரதமர் மோடியை வழியனுப்ப இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். இருவரும் அருகருகே நின்றும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வதை கூட தவிர்த்தனர்.

    மறுநாள் சென்னை வந்த அமித்ஷா சமரச முயற்சியில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சந்திப்பு எதுவும் நடைபெறவில்லை. ஓ.பன்னீர் செல்வம் மட்டும் அமித்ஷா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். எப்படியும் பா.ஜனதா தலையிட்டு சேர்த்து வைக்கும் என்ற நம்பிக்கையில் ஓ.பன்னீர்செல்வம் இருக்கிறார்.

    இதற்கிடையில் கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட அமித்ஷாவை ஆடிட்டர் குரு மூர்த்தி தனியாக சந்தித்து 10 நிமிடங்களுக்கும் மேல் பேசி இருக்கிறார்.

    இந்த சந்திப்பின் போதும் அ.தி.மு.க. ஒன்றுபட வேண்டும். ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் இருப்பது கட்சி ரீதியாக பலம் பெறுவது ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் பா.ஜனதாவுக்கும் சாதகமாக இருப்பார் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

    அந்த கருத்துக்களை கேட்ட அமித்ஷா கட்சி நிர்வாகிகளிடம் 'பூத்' அடிப்படையில் இப்போதே பணியை தீவிரப்படுத்துங்கள். குஜராத் சட்டமன்ற தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் வருகிறேன். அப்போது தொடர்ந்து விவாதித்து செயல்திட்டங்களை வகுக்கலாம் என்று கூறியதாக கூறப்படுகிறது.

    அ.தி.மு.க. ஒன்றுபடாவிட்டால் ஓ.பி.எஸ். தரப்பு எடப்பாடி தரப்பை தோற்கடிப்பதற்கான வேலைகளை செய்யும். சட்ட மன்ற தேர்தலில் டி.டி.வி. தினகரனால் சில தொகுதிகளில் அ.தி.மு.க. தோற்றதை போல் பாராளுமன்ற தேர்தலில் நிகழ்ந்தால் அது பா.ஜனதாவுக்குத்தான் பலவீனத்தை ஏற்படுத்தும் என்ற கருத்தும் உள்ளது. எனவே எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைய வேண்டும் என்பதில் பா.ஜனதா உறுதியாக இருக்கிறது.

    சசிகலாவும், டி.டி.வி.தினகரனும் இதை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஆனால் கட்சியை பெருமளவுக்கு தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி பா.ஜனதாவின் வற்புறுத்தலை ஏற்பாரா? வேறு ரூட்டை போடுவாரா? என்ற பேச்சு கட்சியினர் மத்தியில் தீயாய் பரவிக் கொண்டிருக்கிறது.

    • பாதிக்கப்பட்ட பொது மக்களும், விவசாயிகளும் உரிய இழப்பீடு தரப்பட வேண்டும் என்று எதிர் பார்க்கிறார்கள்.
    • விவசாயிகள் மற்றும் பொதுமக்களுடைய நியாயமான எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழ்நாடு அரசிற்கு உண்டு.

    சென்னை:

    முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை துவங்கியதிலிருந்து பெரும்பாலான இடங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்து வருகின்ற நிலையில், கடந்த 2 நாட்களாக கடலூர், மயிலாடுதுறை, கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகரித்து அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதோடு, பயிர்களும் மூழ்கிப் போய் விவசாயிகளின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி உள்ளது.

    இந்த மழைக்கே இந்த நிலைமை என்றால், 2015-ம் ஆண்டு போன்று பெருமழை பெய்தால் என்ன கதி ஏற்படுமோ என்ற அச்சம் மக்களிடையே தற்போது நிலவுகிறது.

    இது தொடர்பாக அரசின் சார்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும், பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதையும், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருப்பதையும், வீடுகளில் தண்ணீர் புகுந்து இருப்பதையும் பத்திரிகைகள் படம் போட்டுக்காண்பிக்கின்றன. தூக்கமின்றி மக்கள் சிரமப்படுவது கண்கூடாகத் தெரிகிறது.

    பாதிக்கப்பட்ட பொது மக்களும், விவசாயிகளும் உரிய இழப்பீடு தரப்பட வேண்டும் என்று எதிர் பார்க்கிறார்கள். 2020-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை பெய்தபோது, பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஹெக்டேருக்கு 75,000 ரூபாய் வழங்கப்பட வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின். தற்போது அவரே முதல்-அமைச்சராக வந்துள்ள நிலையில் அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு விவசாய பெருமக்களிடையே பரவலாக உள்ளது.

    இதேபோன்று, இதரப் பயிர்களுக்கான இழப்பீடு, சேதமடைந்த வீடுகளுக்கான இழப்பீடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கான இழப்பீடு, படுகாயமடைந்தவர்களுக்கான இழப்பீடு, கால்நடைகளுக்கான இழப்பீடு ஆகியவற்றை 2015-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணைப்படி அரசு அளித்து வருவதாகவும், ஏழு ஆண்டுகளில் விலைவாசி ஏற்றம் கடுமையாக அதிகரித்துள்ளதால் தற்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்ப இழப்பீடு குறைந்த பட்சம் இரட்டிப்பாக்கப்பட வேண்டுமென்றும், இதற்கான நடவடிக்கையை தி.மு.க. அரசு எடுக்க வேண்டுமென்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். விவசாயிகள் மற்றும் பொதுமக்களுடைய நியாயமான எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழ்நாடு அரசிற்கு உண்டு.

    முதல்-அமைச்சர் இதில் உடனடியாக தனிக்கவனம் செலுத்தி, பெரும்பாலான இடங்களில் தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக அகற்றவும், மின்சார இணைப்பு வழங்கப்படாத கிராமங்களுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்கவும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது விடுத்த கோரிக்கைக்கு ஏற்ப நெற்பயிருக்கான இழப்பீட்டினை ஹெக்டேருக்கு 75,000 ரூபாயாக அதிகரிக்கவும், இதர இழப்பீட்டுத் தொகைகளை தற்போதுள்ள விலைவாசிக்கு ஏற்ப குறைந்த பட்சம் 2 மடங்கு உயர்த்தி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இன்று தனித்தனியாக சந்தித்து பேச திட்டமிட்டுள்ளனர்.
    • அரசியலில் முக்கியத்துவம் பெற்ற நகரமான மதுரையில் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் தனித்தனியாக சந்தித்து பேசுவது அ.தி.மு.க.வின் அரசியல் நகர்விலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    மதுரை:

    திண்டுக்கல் அருகே உள்ள காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் இன்று மாலை நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதற்காக தனி விமானத்தில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து இன்று பிற்பகல் 2 மணிக்கு மதுரை விமான நிலையம் வருகிறார்.

    விமான நிலையத்தில் முக்கிய பிரமுகர்கள் மோடியை வரவேற்கிறார்கள். வரவேற்பு முடிந்த பின்னர் மோடி ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துறை செல்கிறார். மோடி வருகையையொட்டி மதுரை விமான நிலையம் முதல் திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழகம் வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    ஒருவேளை ஹெலிகாப்டர் பயணத்திற்கு உகந்த வானிலை இல்லாத பட்சத்தில் சாலை மார்க்கமாக பிரதமர் மோடி செல்வதற்கும் மதுரை-திண்டுக்கல் நான்கு வழி சாலை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    மதுரை வரும் பிரதமர் மோடியை முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தனித்தனியாக சந்தித்து பேச திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஏற்கனவே பிரதமர் அலுவலகத்திற்கு இருவரும் தனித்தனியாக நேரம் கேட்டிருந்தனர். பிரதமர் மோடியும் மதுரை விமான நிலையத்தில் இருவரையும் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து இன்று மதியம் 2.30 மணி அளவில் திண்டுக்கல்லுக்கு புறப்படும் முன்பு எடப்பாடி பழனிசாமியை மோடி சந்திக்கிறார். மாலை 4.30 மணியளவில் திண்டுக்கல் நிகழ்ச்சியை முடித்துவிட்டு மதுரை விமான நிலையம் வரும் போது ஓ.பன்னீர்செல்வத்தையும் பிரதமர் மோடி சந்திக்கிறார்.

    இதற்காக சென்னையில் இருந்து எடப்பாடி பழனிசாமி இன்று காலை 10.30 மணிக்கும், ஓ.பன்னீர்செல்வம் 1.30 மணிக்கும் விமானத்தில் மதுரை வருகிறார்கள்.

    இருவரும் தனித்தனியாக பிரதமர் மோடியை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது அ.தி.மு.க. உள்கட்சி பிரச்சினை குறித்து பேச வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி மோடியை சந்திக்க முடியாத நிலையில் மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியாக சந்தித்து பேச திட்டமிட்டு இருப்பது அ.தி.மு.க. வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மோடி வரும்போது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வமும் மதுரை விமான நிலையத்தில் இருக்கும் நிலையில் அவர்கள் 2 பேரையும் ஒரே நேரத்தில் அழைத்து மோடி பேச வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்று எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் கூறியிருந்தார். இந்த நிலையில் மோடி சந்திப்புக்கு பிறகு இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ் ஆகியோரிடம் மனமாற்றம் ஏற்படுமா? என்பது ஓரிரு நாளில் தெரியவரும் என்றும் அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.

    அரசியலில் முக்கியத்துவம் பெற்ற நகரமான மதுரையில் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் தனித்தனியாக சந்தித்து பேசுவது அ.தி.மு.க.வின் அரசியல் நகர்விலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    • பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவை சரிகட்ட அமித் ஷா பல முறை முயன்றும் முடியவில்லை.
    • எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று ஏற்கனவே கூறிவிட்டார்.

    சென்னை:

    மத்திய மந்திரி அமித்ஷா நாளை மறுநாள் (12-ந்தேதி) சென்னையில் நடைபெறும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன விழாவில் கலந்து கொள்கிறார்.

    இதற்காக நாளை இரவு 10 மணியளவில் தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வருகிறார். பின்னர் அங்கிருந்து காரில் எம்.ஆர்.சி. நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு செல்கிறார். இரவில் அங்கு தூங்குகிறார்.

    பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவை சரிகட்ட அமித் ஷா பல முறை முயன்றும் முடியவில்லை.

    எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று ஏற்கனவே கூறிவிட்டார்.

    இருந்தாலும் இருவரும் சேர்ந்து இருப்பதே கட்சிக்கு பலம் என்ற கருத்தும் நிலவுகிறது.

    2024 பாராளுமன்ற தேர்தலுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் கட்சி மற்றும் கூட்டணிகளை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அமித்ஷா தமிழ்நாட்டிலும் அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவை சரிக்கட்ட மீண்டும் முயற்சிக்கிறார்.

    அதற்காகவே நாளை மறுநாள் நடைபெறும் நிகழ்ச்சிக்கு முன்கூட்டியே சென்னை வருகிறார்.

    எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரையும் அவர் அழைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

    நாளை இரவு இருவரும் அமித்ஷாவை சந்தித்து பேசுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அமித்ஷாவின் முயற்சி பலிக்குமா? என்ற எதிர்பார்ப்பு கட்சியினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையில் இதுபற்றி எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கூறும்போது, மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசுவார். இணைப்பு என்ற கருத்து முன்வைக்கப்பட்டால் ஒற்றைத்தலைமை அது எடப்பாடி பழனிசாமி. அதை ஏற்றுக்கொண்டால் மட்டுமே பரிசீலிக்க முடியும் என்பதில் உறுதியாக இருப்பார் என்றனர்.

    • ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுடன் பெரியார் படத்துக்கு மரியாதை செலுத்த வந்தார்.
    • பெரியார் உருவப்படம் இல்லாததது கண்டு ஓ.பன்னீர்செல்வம் திகைத்து போய் நின்றார்.

    சென்னை:

    பெரியார் பிறந்த நாளையொட்டி, இன்று சென்னை அண்ணாசாலை அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள அவரது சிலைக்கு அடியில் வைக்கப்பட்டு இருந்த உருவ படத்துக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுடன் திரண்டு வந்து பெரியார் படத்துக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அப்போது முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அங்கு வருவதாக எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கு தகவல் கிடைத்தது.

    உடனே நிகழ்ச்சி முடிந்ததும் அவர்கள் பெரியார் படத்தை அங்கிருந்து கையோடு தூக்கி சென்றனர்.

    சிறிது நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுடன் பெரியார் படத்துக்கு மரியாதை செலுத்த வந்தார். அங்கு பெரியார் உருவப்படம் இல்லாததது கண்டு அவர் திகைத்து போய் நின்றார். அவரது ஆதரவாளர்களும் என்ன செய்யலாம் என்பது தெரியாமல் விழித்தனர். அந்த சமயம் அ.ம.மு.க தொண்டர்கள் பெரியார் படத்துடன் அங்கு வந்தனர்.

    இதனால் வேறு வழியில்லாமல் அந்த படத்தை சிலைக்கு கீழ் வைத்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இந்த சம்பவம் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×